Monday, September 6, 2010

ஜோதிகாவிடம் சினிமா பேசுவதே இல்லை-சூர்யா


பேட்டியின் போது சூர்யா கூறியதாவது:

நான் நடிக்க வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. 'அயன்' என்னுடைய 23-வது படம். வாரணம் ஆயிரம் படத்திற்கு எனக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. பாராட்டுகளும் கிடைத்தன. அதற்கு நான் தகுதி உள்ளவனா? என்ற புழுக்கம் உள்ளுக்குள் இருந்து கொண்டு இருக்கிறது. உண்மையைச் சொல்லணும்னா, பாராட்டு கிடைத்த அளவுக்கு நான் இன்னும் உழைக்கவே இல்லை.

ரகுமான் சொல்வது போல், எல்லா புகழும் இறைவனுக்கே. எல்லாம் படங்களிலும் நடிக்கும் போது ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். அயன் படத்தில் நடிக்கும் போது மட்டும், அந்த பதட்டம் இல்லை. இயக்குநர் கே.வி. ஆனந்த் என்னுடைய முதல் படத்திலிருந்து என் மீது அக்கறை கொண்டவர். ஒரு அண்ணணை சகோதரனைப் போல் அக்கறை எடுத்து என்னை கவனித்து கொண்டார்.

ஏ.வி.எம். நிறுவனத்தில் நான் நடிக்கும் 2-வது படம் அயன். ஒரு தயாரிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஏ.வி.எம். நிறுவனத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சின்ன வலிகூட தெரியாமல் என்னையும், படப்பிடிப்பு குழுவினரையும் ஏவி.எம். சரவணணும், அவரது மகன் குகனும் கவனித்து கொண்டார்கள்.

பட்டப் பெயர்

ஏன் பட்டப்பெயர் சூட்டிக் கொள்ளவில்லை என்று கேட்கிறார்கள். பத்திரிகையாளர்களும் அதையே கேட்கிறீர்கள். எனக்கு ஏற்கனவே ஒரு முறை என் பெயர் மாற்றப்பட்டுவிட்டது. சரவணன் என்ற பெயரை, சூர்யா என்று மாற்றிவிட்டார்கள். பெயருக்கு முன்னால் போடுகின்ற பட்டம் என்றால் எனக்கு அலர்ஜி.

திருமணம் ஆகி, ஒரு குழந்தைக்கு அப்பாவானதால் எனக்கு பெண் ரசிகைகள் குறைந்து விட்டார்களா இல்லையா என்ற கணக்கு வழக்கு எனக்குத்தெரியாது. (உடனே இயக்குநர் கே.வி.ஆனந்த் குறுக்கீட்டு, ரசிகைகள் ஆதரவு சூர்யாவுக்கு முன்பை விட அதிகமாகி இருக்கிறது. இதை படப்பிடிப்பின் போது நேரில் கண்டேன் என்றார்)

சினிமா பற்றி பேசுவதில்லை

ஜோதிகாவின் கணவர் என்பதில் எனக்கு நிறையவே மரியாதை கூடியுள்ளது. ஆனால் நான் நடிக்கும் படங்கள், கதை குறித்தெல்லாம் ஜோதிகாவுடன் நான் விவாதிப்பதில்லை.

வீட்டில் ஜோதிகாவுக்கு நல்ல கணவராகவும், மகள் தியாவுக்கு நல்ல தந்தையாகவும் இருக்கிறேன். அதற்கே நேரம் சரியாக இருக்கிறது. ஜோதிகாவிடம் சினிமா பற்றி நான் பேசுவதில்லை. ஏதாவது பேச ஆரம்பித்தால் கூட, தியா பற்றி பேசுங்கள் என்று என் மனைவி கூறிவிடுவார்.

சிவகுமாருடன் ஒப்பிட வேண்டாம்!

எல்லோரும் என்னை என் தந்தை சிவக்குமாருடன் ஒப்பிட முயற்சிக்கிறார்கள். அது அடிப்படையில் தவறு. அவர் பல பரிமாணங்களைப் பார்த்தவர். தனது ஒவ்வொரு பத்து வருடத்திலும் புதுப் பரிமாணம் கண்டவர். ஒரு ஓவியனாக, நடிகராக, பின்னர் கதாநாயகனாக, குணச்சித்திர நடிகராக, எழுத்தாளராக, இப்போது இலக்கிய சொற்பொழிவாளராக... எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. அவர் அளவுக்கெல்லாம் என்னால் ஜொலிக்க முடியுமா என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

கம்பராயமாயணம் புத்தகத்தை நானெல்லாம் தொட்டுப் பார்த்தது கூட இல்லை. அதற்கான பொறுமை, அதை விளங்கிக் கொள்ளும் அறிவு நமக்கு இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அவரோ இரண்டரை மணி நேரத்தில் இடைவெளியின்றி கம்ப ராமாயணப் பாடல்கள் மூலம் அந்த காப்பியத்தையே சொல்லிவிட்டார். அந்த பிரமிப்பே எனக்கு அடங்கவில்லை. பல பரிமாணம் கண்ட அவருடன், இப்போதுதான் நடிக்க ஆரம்பித்திருக்கும் என்னை ஒப்பிட வேண்டாம்.

பணத்துக்காக மட்டும் நடிக்கக் கூடாது!

நான் நடிக்கும் ஒவ்வௌரு படமும் ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமாக அமைய வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக நிறைய ஹோம் வொர்க் செய்கிறேன். சண்டைக் காட்சிகளில் முழு ரிஸ்க் எடுத்து நான் செய்யக் காரணம், என்னுடைய 100 சதவிகித பங்களிப்பை என் கேரக்டருக்குத் தர வேண்டும் என்பதால்தான். பணத்துக்காக மட்டும் நான் நடிப்பதில்லை. அப்படி நடிக்கவும் கூடாது, என்றார் சூர்யா.

No comments:

Post a Comment